பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்141

காலம் கடந்த

இன்றைய கிழமை மறந்துவிட்டது
இன்றைய தேதி மறந்துவிட்டது
இன்றைய மாதம் மறந்துவிட்டது
இன்றைய வருடம் மறந்துவிட்டது
சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டும்
இது இருபதாம் நூற்றாண்டு என்கின்றன
அது ஒன்றுதான்
சொல்லி சொல்லி
நினைவில் மரத்துப் போயுள்ளது
மற்றபடி
அதே தேர்த்திருவிழாக்கள்
கும்பாபிஷேகங்கள்
மதகுருமார்கள்
மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட
அரச குமரர்கள்
சொத்துச் சண்டைகள்
பிரியும் குடும்பங்கள்
போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி
போர் வெறி
கொலை மிரட்டல்
ஜனநாயக சர்வாதிகாரம்
சட்டப் புத்தகங்கள்
ஆழ்ந்துறங்கும்
மனித உரிமைகள்
நிலையின்மை
கவலையை மறக்க
பத்திரிகைகள் சினிமா
ஜோதிட சமய இதழ்கள்
எதற்கிந்தக் கவிதை
எந்தக் குடிமகனுக்காக
நான் எழுதுவதை நிறுத்துகிறேன்
என் காலடியில்
கொஞ்சும் நாய்குட்டிக்காக
இன்னும் எனது நம்பிக்கை
நசித்துப் போகவில்லை
இன்னமும் கொஞ்சம்
அன்பு மீதமிருக்கிறது