பக்கம் எண் :

146ஆத்மாநாம் படைப்புகள்

மறுபடி மறுபடி

சொல்லச் சொல்லச்
சொற்கள் மயங்கும்
எழுத எழுத
எழுத்து இறக்கும்
குழம்பும் மனத்தில்
எழுத்தும் சொல்லும்
குப்பை மேட்டில்
கிடக்கும் பொருட்கள்
வரிகள் ஆகும்
வார்த்தைகள் எல்லாம்
விளக்கும் தத்துவம்
தான் என்ன
காற்றில் இருக்கும்
வார்த்தைகள் எல்லாம்
காதில் சொல்லும்
ரகசியம் என்ன
குருவை சிஷ்யன்
மறுபடி மறுபடி
குருவின் உதட்டில்
மறுபடி மறுபடி
சிஷ்யன் மறைந்தான்
குருவாய் மாறி