பக்கம் எண் :

152ஆத்மாநாம் படைப்புகள்

என் அறை

என் அறை
உங்களுக்குப் பழக்கமானதுதான்
உங்களுக்கு மட்டும் என்ன
எனக்கும்தான்

ஏன் அறைகள்
நம்முடன் பழகுகின்றன
இல்லை நாம்
அறைகளுடன் பழகுகிறோம்
நாம் எல்லோருமே
அறைவாசிகள்
அறைக்குள் காற்று வாங்குவோம்
கவிழ்ந்து படுத்திருந்து
தவழ்ந்து விளையாடுவோம்
அறைக்குள் நம்முடன்
இருக்கின்றன
நீர்ப்பானை
உணவளிக்கும் அடுப்பு
ஏராளமான பேப்பர்
அதோ சுவர் மூலையில் பல்லி
அபாயம் என்று
சுட்டிக்காட்டும் சுட்டு விரல்
பறக்கும் மனிதன்
குரங்கு மனிதன் பறக்கும் மனிதன்
பெரிதாய் முலை காட்டும்
பெரிய இளவரசி
கற்சுவர்கள்
சுண்ணாம்பின் பின்னே
நாம் நாகரீகக் குகைவாசிகள்
பேனா எலும்புடன்
சுற்றி வரும் கற்கால மனிதர்கள்
இத்துடன் நம்மை நாமே
ஏமாற்றிக்கொள்ளும்
பழைய கதை முற்றும்
நாம் புத்திசாலிகள்