பக்கம் எண் :

158ஆத்மாநாம் படைப்புகள்

தோற்றம்

தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்க வேண்டும்
நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல
கற்பனை வாழ்க்கையிலும்தான்
நிஜ வாழ்க்கையில் தோன்றுவது சுலபம்
ஏனெனில் அங்கு அனைவரும் தோற்றம் அளிக்கிறார்கள்
டீ கொடுப்பதில் சாப்பாட்டுக்கு அழைப்பதில்
திருமணங்கள் நடத்துவதில்
ஆபீஸ் போவதில்
சினிமா போவதில்
நாடகங்கள் போவதில்
இசை கேட்பதில்
இப்படிப் பல்வேறாக
கற்பனை உலகில் தோன்றுவது கஷ்டம்
அங்கும் சில உண்மைகள் இருக்கிறார்கள்
ஒரு விஞ்ஞானியாக
ஒரு தத்துவ வாதியாக
ஒரு சிற்பியாக
ஒரு ஓவியனாக
ஒரு கவிஞனாக
ஒரு இசை ரசிகனாக
ஒரு நாடக இயக்கக்காரராக
ஒரு கூத்துக்காரராக
ஒரு நாட்டிய ரசிகராக
ஒரு திரைப்படக்காரராக
இவற்றில் நாம் யார்?
கண்டுபிடிப்பது கஷ்டம்
ஏனெனில் எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் உள்ளது
அதன் கண்டுபிடிக்கும் காலத்தில்கூட
நாம் கண்டுபிடிக்க மாட்டோம்
மீண்டும் இவ்வாறு இருக்க