பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்163

கேள்வி

காலை எழுந்ததும்
இரை தேடத் துள்ளும்
இவ்வணில்
இரவு எங்கே உறங்குகிறது
மலர்க்கிளைப் படுகையிலா
ஆற்று மணற்சரிவிலா
சதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலா
நிச்சயம் நூற்றுக்கணக்கில் இருக்கும்
இவ்வணில்கள்
ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன்
சிறு பிள்ளைக் கைகளுடன்
அனுபவித்து உண்ணும்
இவை
தங்களைப் பற்றி என்ன கனவு காணும்
உணவையும் உறக்கத்தையும் தவிர