பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்179

ஒரு கவிதை

ஒவ்வொரு நாளும்
புலரும் காலையில்
அவன் என்னைப் பார்க்கிறான்
நான்
என்
தூசிப்பற் பொடியுடனும்
முகக் கழுவல் மற்றும் பூச்சிலும்
கழிவை நீக்குவதிலும்
தாகத் தணிப்பிலும்
செய்திச் சுடர்களிலும்
பின் அனாவசிய விமர்சனத்தில்
ஈடுபடுவதையும் கவனித்து
தன் உஷ்ணத்தை
எனை நோக்கிப் பாய்ச்சுகிறான்
கருக்கென்கையில்
காகங்களின் (அகவல்களும்) கரைதல்களும்
குயிலின் மோகன ஸ்ருதியும்
தவறிவிட்டன
ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது
தண்ணீர்ப் பம்பின்
அலுப்பூட்டும் அலறல்