பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்207

டேட்யூஸ் ரோஸ்விக்ஸ்
*கவிதை ஒன்றின் விரிவுரை

நான் நினைவுகூர முயன்றேன்
அந்தச் சீரான
எழுதப்படாத
கவிதையை

கிட்டத்தட்ட கனிந்த
இரவில் உருவான
தொட்டுணரக்கூடிய
அது அமிழ்ந்துகொண்டு
மற்றும் காலை வெளிச்சத்தில் கரைந்துகொண்டு
அது வாழவில்லை

சில நேரங்களில் நான் அதை உணர்ந்தேன்
நாக்கின் நுனியில்
பரபரப்புடன்
நான் அமர்வேன் பேனாவைக்
கையில் பிடித்துப்
பொறுமையுடன் காத்திருந்து
திருப்தியடையும்வரை
அது ஒரு மாயை
நான் நடந்து போய்விடுவேன்

அக்கவிதை ஒரு வேளை
ஒரு கவிதையைப் பற்றியதாகவே இருக்கக்கூடும்
ஒரு முத்தென
முத்துக்களைப் பற்றியே பேசுவதாய்
மற்றும் வண்ணாத்திப் பூச்சுகளின் வண்ணாத்திப்
பூச்சியாய்

அது ஒரு காதல் கவிதையோ
ஒரு புலம்பலோ அல்ல
அது துக்கிக்கவுமில்லை
புகழவுமில்லை
அது விரிவுரைக்கவோ
தீர்ப்பளிக்கவோ இல்லை