பக்கம் எண் :

30ஆத்மாநாம் படைப்புகள்

மறுபரிசீலனை

நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன்
நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன
நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்
புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்
நான் மனிதன்தானா என்று சோதித்துக்கொள்ளும்
நிர்ப்பந்தங்கள்
தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள்ளென
பச்சைப் புல்வெளியிடை சிக்கிக்கொண்ட கரும்பாம்பு
வெறுமனே சும்மா இருக்க முடியாத பேனா
சிதறிப்பறக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்
எங்கோ கேட்கும் கூக்குரல்
துணிக்கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்
தூங்குபவர்களையும் தூங்குவது போல் நடிப்பவர்களையும்
எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்
புறப்பட்டாகிவிட்டது கருப்புப் படை