பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்31

ஒரு குதிரைச் சவாரி

நரம்பியலாளர் வாகனம் ஓட்ட
பின்னால் நான் அமர
வாகனத்தின் சத்தம்
அவரை ஒன்றும் செய்யவில்லை
படபடத்துக்கொண்டிருக்கும்
மூளையின் மேல் நான்
சீராய்ச் சாலையில் செல்கிறது
அவர் ஓட்டம்
சிவப்பு நட்சத்திரங்களைக்
கடந்து வாகனத்தை நிறுத்தும் அவர்
சாலையிலேயே நான்
காப்பியை வேகமாய் உறிஞ்சுகிறார்
நானோ மெல்லத் துளித்துளியாக
வீட்டை அடைந்துவிட்டோம்
படிக்கட்டுகளைத்
தாவிக் கடக்கிறார்
படிக்கட்டுகளை
இன்னும் எண்ணிக்கொண்டிருக்கும் நான்