பக்கம் எண் :

36ஆத்மாநாம் படைப்புகள்

ஓவிய உலகம்

ஓவியம் உலகை அடக்கும்
உலகம் ஓவியத்தை அடக்கும்
ஓவியன் தன்னை அடக்கி
உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்

உயிர் மூச்சை வண்ணக் கலவையாக்கி
செங்குருதி வியர்வை கலக்கி
                ஒரு முகம்
                ஒரு ஜாடி
                ஒரு காட்சி

காம அவஸ்தைகள் மனப் போராட்டங்கள்
ஒடுக்கப்பட்ட உயிர்களின் ஓலோலம்
எல்லாம் ஒவ்வொன்றாய் சட்டமாகும்

உலகம் அடங்கிவிட்டது
ஆர்ப்பரிக்கும் ஓவியன்
ஓவியம் தோற்றுவிட்டது
கூச்சலிடும் விமர்சகன்

தொடரும் போட்டியில்
முகம் புரியா முகங்கள்