இழுப்பறைகள் கொண்ட மேஜை அது உறுதியாகத் தரையில் இருப்பது போல்தான் படுகிறது நான் பறந்துகொண்டும் தத்திக்கொண்டும் இருக்கிறேன் எங்கிருந்தோ கிடைத்த புத்தகங்களையும் பொருட்களையும் மேஜைமேல் அடுக்கிக்கொண்டே போகிறேன் நானும் களைந்துகொண்டேயிருக்கிறேன் குதித்துவிடுவான் ஒன்றுமேயில்லை என்ற ஆவலான குரல் கேட்கிறது புத்தகங்களையும் பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் வீழ்த்துகிறேன் சிரித்துக்கொண்டே தப்பித்துவிட்ட சிரிப்பொலி கேட்கிறது உருவம் புலப்படுவது போல் இருக்கிறது அடுத்து நான் விழ வேண்டும் துணிகள் ஏராளமாய்க் கொண்ட இழுப்பறை ஒரு பக்கம் ஆவலான சிரிப்பொலி மறுபக்கம் நான் வீழ்ந்தேன் நடுக்கடலுக்குள் எழுந்தேன் * ஜோஸப் ப்ராட்ஸ்கியின் When I Embraced These Shoulders என்ற கவிதையை நான் மொழிபெயர்த்து அது ழ - 19 (அக்-1981) இதழில் வெளிவந்தது. அக்கவிதையின் 18வது வரியிலிருந்து இந்தத் தலைப்பை ஆத்மாநாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், இந்தக் கவிதை ழ - 20 (பிப். 1982) இதழில் வெளிவந்தது. |