நான் இருபத்தி இரண்டு ஆண்டுகள் படிப்பு வேலை தொழில் எல்லாம் பார்த்தாகிவிட்டது சந்தித்த முகங்கள் மறக்கத் துவங்கியாயிற்று என் தாய் இப்பொழுது விதவை வானொலிப் பெட்டிகள் மாற்றப்பட்டு வானொளிப் பெட்டிகள் வந்துவிட்டன கோடிக்கணக்கான வார்த்தைகள் சேர்ந்து எங்கும் கவிதைகளாய்த் தெரிகின்றன பழைய புதிய இலக்கியங்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன கட்சிகள் உடைந்து ஏராளமாய்ப் புதிய கட்சிகள் தோன்றியுள்ளன ஏராளமான தலைவர்கள் இறந்துள்ளனர் புதிய புதிய தலைவர்கள் உருவாகி வருகின்றனர் தெருக்களின் பெயர்கள் மாறி வருகின்றன புதிய நகர்ப்புறங்கள் உருவாகியுள்ளன விஞ்ஞானத்தில் மெய்ஞ்ஞானத்தில் ஏராளமான சாதனைகள் நிகழ்கின்றன பல போர்களை உலகெங்கும் பார்த்தாகிவிட்டது இதோ உலகப்போர் இதோ உலகப்போர் என்ற அச்சம் பலமுறை வந்துவிட்டது இனி போரே இல்லை இரு பக்கமும் சமம் என்ற குரலும் பழகிவிட்டது அணுப் போருக்குப் பின் புதிய சமுதாயம்தான் என்றும் அச்சுறுத்தியாகிவிட்டது இருந்தும் இன்னும் ஒரு முறைகூட அண்டை வீட்டானுடன் பேசியதில்லை |