பக்கம் எண் :

62ஆத்மாநாம் படைப்புகள்

அலைவுகள்

அகாலத்தில்
தோன்றியவனோ என்று
சில வேளை தோன்றுகிறது

டீக்கடைப் பெஞ்சின் மேல்
உட்காருகையில்
அதன் மேலிருக்கும்
கை கால்களைப் பார்த்து
அதன் மூதாதையர்
நினைவெனக்கு வருகிறது

கட்டிடக் கண்ணாடியின்
பிம்பத்தைப் பார்த்து
எதிரிலிருக்கும் ஒளி தெரிகிறது

எவனோ ஒருவன்
விலை உயர்வைப் பற்றிப்
புலம்பிக்கொண்டேயிருக்கிறான்

காக்கையின் கறியைத்
தின்றிருக்கும் மக்கள்
தங்களின் தலைவன்
பிறந்த நாளில் ஆரவாரிக்கிறார்கள்

இன்னும் அகரத்தைத் தொடுமுன்பே
நிழல் பொசுக்கி அழுத்திடுகிறது
பண்டைய காலம் இன்றைய காலத்துடன்
இணையும் இடைவேளையில்