பக்கம் எண் :

76ஆத்மாநாம் படைப்புகள்

குட்டி இளவரசி வந்துவிட்டாள்

டப்பியின் க்ளிப்புகளைப் பரப்பி வைப்பாள்
சுவர் அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்
கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்
மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்
ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்
பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்
பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை
தனக்குள் தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்
ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே
பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்
அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்