பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்79

வேலி

வேலி
பொலிவிழந்து
இருந்தும் இல்லாமல்
இருந்தது

வேலியைத் தாண்டினோர் பலர்
வேலியைக் கீறி உள் நுழைந்தோர் பலர்
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும்
வேலி ஒரு லட்சியமே இல்லை

ஒரு நாள் காலை
வேலியைக் கழற்றிச் சுருக்கியாயிற்று

மரங்களும் புற்கூட்டமும் தழைகளும்
நிஸ்சிந்தையாய் இருந்தன

கண்ணெதிரே தோன்றி
விறைத்திருந்தது ஒரு வேலி