பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்89

சூழல்*

விறைகளென விறைத்திருந்த மரங்கள்
வான் நோக்கி
எம்மைப் பின்தொடரும்
தொடரும் சாட்சிகளாய்

எமக்காகக் காத்திருந்தது ஏரி தனிமையில் தனிமையில்...
பாறைகள் எம்முடன் உரையாடிக்கொண்டிருந்தன
உங்களுடனும்
மொழியில்லா மொழியில்

இவ்வேரியின் சலனம் எம்முடையதோ உங்களுடையதோ
அல்ல இவ்வேரியின் சலனம்தான்

நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக் கூடாது

சலனமற்று வான் நோக்கிப் பாறைகளுடன் பேசிக்கொண்டு

*1982ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், ஆத்மாநாம் ஊட்டியில்தங்கியிருந்தபோது இந்தக் கவிதை உருவானது. ஊட்டியின் வெளிப்புறப் பகுதியில் அமைந்துள்ளகோல்ப் லிங்குக்குப் பக்கத்தில் உள்ள ஏரிக்கு ஒரு நிலா ஒளி இரவில் சென்றபோதுஇந்தக் கவிதையை ஆத்மாநாம் சொல்ல நான்கு பேர் நினைவில் வைத்திருந்து மறுநாள்காகிதத்தில் எழுதினோம். நினைவில் வைத்திருந்தவர்கள்: நான், என் மனைவி ராஜலக்ஷ்மி, மறைந்த மணிக்கண்ணன், ஆத்மாநாம்.