பக்கம் எண் :

90ஆத்மாநாம் படைப்புகள்

மூன்று கவிதைகள்

1. முத்தைப் பறிகொடுத்துக் கதறும்
  சிப்பியின் ஓலம்
  கடற்கரையில்
  தூண்டில் மீன்களுக்கு
  உண்டு ஒரு கூடை
  என்றும் நிரந்தரம்

                 2. எதிர்காலம்
                    துள்ளிக்குதித்து வரும்
                    பள்ளிவாசலில்
                    அற்பஅறிவை
                    ஒதுக்கித்தள்ளிப் பார்த்தேன்
                    உலகம் அழகானது
                    காற்றாய் மரமாய்
                    செடியில் மலராய்
                    என்னை ஆட்கொண்டது
                    இப்பரந்த உலகின்
                    ஊசி முனையில்
                    நின்றுகொண்டு பார்த்தேன்
                    உலகம் அழகானது

3. மதியச் சூட்டில்
  இறப்புச் செய்திகள்
  வெறுமையைப் பறிக்கும்
  வெற்று வெளியைப் பார்த்துக்கொண்டு
  எங்கோ இயங்கும்
  இயந்திர ஒலிகளின் மயக்கத்தில்
  போதையுற்று நகர்கையில்
  ஒரு கணம் நெஞ்சம் கனக்கும்
  கைப்பிடிக்குள் சிக்கிய மணல் போல்
  அலைகடல் ஆர்ப்பரிக்கும்
  கலகலத்துப் பின்வாங்கும்
  எங்கோ சில பறவைகள் கூடுகட்டும்