பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்91

சாலை

சாலையைப் பாரடா நெடுஞ்
சாலையைப் பாரடா
உன் கவலைகளை
அழகுடன் பகிர்ந்துகொள்ளும்
இருபக்கச் சாலை
மரங்களைப் பார்
அரசாங்கம்
அவற்றைத்
தனது சொந்த மரங்களாக்கியிருக்கலாம்
ஆயினும் அவை
உன்னுடன்தான் உறவாடுகின்றன
இரும்புக் கழிவுகளைக் கொண்டுசெல்லும்
லாரியைப் பார்
வைக்கோல் போரைக் கொண்டுசெல்லும்
காளை வண்டியைப் பார்
நடுநடுவே
மனிதர் வாழும் இடங்களிலுள்ள
பெருந்தலைவர்களின் சிலையைப் பார்
நின்றபடி நகரும்
சாலையின் தன்மையைப் பார்
நான் சாலையின் ஒரு மூலையில் இருந்தாலும்
நீ சாலையின் பிறிதோர் மூலையில் இருக்கிறாய்
நாம் சாலையிலேயே இருக்கிறோம்
சாலை நம்மை இணைக்கிறது
மரங்கள் நம்முடன் உறவாடுகின்றன
பயணம் இனியதாகிறது
உன் கவிதைத் தொகுப்பைத் தூக்கியெறி