பக்கம் எண் :

92ஆத்மாநாம் படைப்புகள்

மழை

பொய்த்த மழை
இரவு பெய்துவிட்டது
காற்றைத் தண்மையாக்கிய மழை
உடலை மென்மையாக வருடுகிறது
சாலையின் சிறுசிறு பள்ளங்களில்
நீர் தேங்கியுள்ளது
எங்கள் பூமி செம்மண் ஆனதால்
மழை நீரும் காவியேறியுள்ளது
காற்று வீச
சிறு அலைகள் மெல்லத் தவழ்கின்றன
கிணற்றிலும்
கொஞ்சம் நீர் பாய்ந்துள்ளது
அதன் ஸ்படிகத் தெளிவு
என் கண்களைக் கூசச் செய்கிறது
ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த
சூல் கொண்ட மேகங்கள்
மண்ணுடன் காதல் கொள்கையில்
மழை பிறக்கிறது
அதன் ஒவ்வொரு துளியும்
எங்களுக்கு உணவு
மழையைத் தியானித்து
சொற்கள் மூலம் வேண்டுதல் விடுக்கிறோம்
மழை
நீ நான் இவ்வகிலம் முழுவதும்
இன்றைக்கு மழைதான் எம் சிந்தனை
இன்றைக்கு மழைதான் எம் கடவுள்