பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்93

அளவு

இளவரசி பேசத் துவங்கிவிட்டாள்
அவளிடம் ஏராளமான கேள்விகள் உள்ளன
இதன் நிறம் என்ன
என் மனப்பதிவில் நீலம் புகுந்துவிட்டது
எல்லாப் பொருள்களிலும்
நீலம் அப்பிக்கொண்டிருக்கும்
நீலம் அதிகமாகிப் போய் இருக்கும்
வர்ணங்களைக் குறைப்பதிலும் கூட்டுவதிலும்
நாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
உலகம் வர்ணமயமானது என
ஏற்கெனவே கூறியுள்ளார்
பார்வை மிக முக்கியமான ஒன்று
எல்லாப் பொருட்களும்
வர்ணங்களால் ஆனது
ஒரு பொருளை
முழுமையாக விளக்க வேண்டும்
வார்த்தை ஒவ்வொன்றிற்கும்
ஒரு பொருள் உண்டு
அந்த அர்த்தத்தில்
சொல்லப்பட வேண்டும் அதை
முழுமையாக
ஒரு சித்திரம்
போல் இருக்க வேண்டும்
சித்திரத்திற்குக் குரல் இருக்க வேண்டும்
அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்
இவ்வளவும் சேர்ந்த பின்
அதற்கு ஒரு அழகிருக்க வேண்டும்
படித்தவன் பார்க்க வேண்டும்
பார்ப்பவன் பேச வேண்டும்
பேச்சில் தெளிவு
வற்றாதது தெளிவு
நீங்கள் ஒவ்வொருவரும்
ஒரு சமவெளியை நிரப்பிக்கொண்டுள்ளீர்கள்