1. எட்டுத்தொகை நூல்கள் எட்டு நூல்கள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் கடைச்சங்க நூல்கள். எட்டு நூல்கள் கொண்ட ஒரு தொகுப்புக்கு எட்டுத் தொகையென்று பெயர். இந்த எட்டுத்தொகை நூல்கள் ஒவ்வொன்றும் பல புலவர்களின் பாடல்களைக் கொண்டவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை அந்த எட்டு நூல்களின் பெயர்கள். நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்குபரி பாடல், கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு, அகம் புறம், என்று இத்திறத்த எட்டுத் தொகை இவ் வெண்பா எட்டுத்தொகை நூல்கள் இவைகள் என்பதைக் குறிக்கின்றது. இது ஒரு பழைய வெண்பா. நற்றிணையிலே நானூற்றொரு பாடல்கள் இருக்கின்றன. அதன் முதற்பாட்டு கடவுள் வாழ்த்துப் பாடல். அது பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றும் இல்லை. இக் காலத்தில் எழுதப்பட்ட உரையே கிடைக்கின்றது. இது பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் என்னும் புலவரால் எழுதப்பட்ட உரை. |