பக்கம் எண் :

2எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

குறுந்தொகையிலே நானூற்றிரண்டு பாடல்கள் இருக்கின்றன. இதன் முதற்பாட்டு கடவுள் வாழ்த்துப் பாடல். இதைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். குறுந்தொகையிலே கடவுள் வாழ்த்தைச் சேர்க்காமல் நானூறு பாடல்கள் இருந்திருக்கலாம். நற்றினை நானூறு, அகநானூறு, புறநானூறு என்பவைகளைப் போலவே குறுந்தொகையும் நானூறு பாடல்களைக் கொண்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு பாடல் கூடியிருப்பது பிற்காலத்துச் சேர்க்கையாக இருக்கலாம்.

குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரையெழுதினார். அவரால் உரை யெழுதாமல் விடப்பட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதினார். இந்த இருவர் உரைகளும் இப்பொழுது கிடைக்கவில்லை. இக்காலத்தில் சௌரிப்பெருமாள் அரங்கன் என்னும் புலவர் உரையெழுதியுள்ளார். மகாமகோபாத்தியாய சாமிநாதய்யர் அவர்களும் உரையெழுதியிருக்கின்றார். அய்யர் அவர்களின் உரை சிறந்தது.

ஐங்குறு நூறு ஐந்நூறு பாடல்களைக் கொண்டது. கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து ஐந்நூற்றொரு பாடல்கள். இந்தக் கடவுள் வாழ்த்தும் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் தான் பாடப்பட்டது. இந்நூலுக்கு விளக்கமான பழைய உரை ஒன்றும் இல்லை. குறிப்புரை போன்ற ஒரு உரையுண்டு. இக்காலத்திலே ஒளவை துரைசாமிப் பிள்ளை என்னும் புலவர் இந்நூலுக்கு உரை வகுத்துள்ளார்.

பதிற்றுப்பத்து நூறு பாடல்களைக் கொண்டதொரு நூல். பத்து சேரமன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டவை. ஒவ்வொரு சேரமன்னன் மீதும் பத்துப் பத்துப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவரால் பாடப்பட்டவை.