பதிற்றுப்பத்திலே இன்று எட்டுப் பத்துக்கள்தாம் இருக்கின்றன; எண்பது பாடல்களே உண்டு. முதற்பத்தும் இல்லை; பத்தாம் பத்தும் இல்லை. இதற்குப் பழைய அரும்பதவுரை ஒன்றுண்டு. அவ்வுரையாசிரியர் யார் என்று தெரியவில்லை. பரிபாடலில் இருபத்து நான்கு பாடல்கள் இருக்கின்றன. சிதைந்த சில பாடற்பகுதிகளும் காணப்படுகின்றன. கடைச்சங்க காலத்திலே எழுபது பரிபாடல்கள் இருந்தனவாம். இதற்குப் பழைய உரை ஒன்றுண்டு. அது பரிமேலழகர் உரை. கலித்தொகை நூற்றைம்பது கலிப்பாடல்களைக் கொண்டது. ‘‘கற்றறிந்தார் ஏத்தும். ’’ கலி என்பது இந்நூலுக்கு ஏற்ற பாராட்டுரை. கடவுள் வாழ்த்துப் பாடலும் இந்நூலோடு சேர்ந்தது. இந்நூலின் ஐந்தாவது பகுதியாகிய நெய்தற் கலியைப் பாடிய ஆசிரியரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளார். இவரேதான் இந் நூலைத் தொகுத்தவர். இந்நூலுக்கு நச்சினார்க்கினியரின் உரையுண்டு. அகநானூறு நானூற்றொரு பாடல்களைக் கொண்டது. முதற்பாட்டு கடவுள் வாழ்த்து; பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இந்நூலுக்குப் பழைய அரும் பதவுரை ஒன்றுண்டு. முதல் தொண்ணூறு பாடல்களுக்கே அவ்வுரை கிடைத்திருக்கின்றது. இந்நூலைப் பதிப்பித்த ராஜகோபாலாச்சார்யன் என்பவர் எழுபது பாடல்களுக்கு உரையெழுதி யிருக்கின்றார். நாவலர் நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து ஒரு உரை எழுதியுள்ளனர். புறநானூற்றில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து முந்நூற்றுத் தொண்ணூற்றெட்டுப் பாடல்கள் அடங்கியிருக்கின்றன. கடவுள் வாழ்த்துப்பாடல் பாரதம் பாடிய |