6. கலித்தொகை நூல் வரலாறு கலித்தொகை-கலிப்பாக்களின் தொகுப்பு. கலிப்பா-கலிப்பாட்டு. ஆசிரியப்பாவைப்போல் கலிப்பாவும் சொல்லக் கருதிய பொருள்களை விளக்கமாகச் சொல்லுவதற்கு ஏற்ற பாட்டு. அகப்பொருட் செய்திகளை அழகாகக் கூறுவதற்குத் தகுந்தது கலிப்பா என்பது முன்னோர் கொள்கை. கலிப்பாடல்களை இசையுடன் பாடலாம். ஒரே பாடலைப் பல இசைகளிலே இணைத்துப் பாட முடியும். சொல்லத் தொடங்கிய பொருளைத் தொகுத்துக் கூறலாம்; விரித்துரைக்கலாம்; சுருக்கிச் சொல்லலாம். இத்தகைய சிறந்த பாடல்களின் தொகுப்புக்கே கலித்தொகையென்று பெயர் கொடுத்தனர். இக்கலித்தொகை, அமைப்பிலே ஐங்குறுநூற்றைப் போன்றது; ஐந்து பகுதிகள் அடங்கியிருக்கின்றன. ஐந்தும், ஐந்து தனித்தனிப் புலவர்களால் பாடப்பட்டவை. பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தற்கலி; இவைகளே அந்த ஐந்து பகுதிகள். பாலையொழுக்கத்தைப் பற்றிப் பாடியது பாலைக்கலி. இதிலே தலைவன் பொருள் தேடப் பிரிவது; செல்வத்தின் சிறப்பு; அதன் இன்றியமையாமை; ஆகிய செய்திகள் சொல்லப்படுகின்றன. |