110 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
குறிஞ்சி ஒழுக்கத்தைப்பற்றிக் கூறுவது குறிஞ்சிக் கலி. தலைவனும் தலைவியும் சந்தித்தல்; காதல் மணம் புரிந்துகொள்ளுதல்; இரவிலும் பகலிலும் அவர்கள் ஒருவரை யொருவர் சந்தித்தல்; அவர்கள் கற்பு மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்வு நடத்த முயற்சித்தல்; இவை போன்ற காதல் நிகழ்ச்சிகளை இந்தக் குறிஞ்சிக் கலியிலே காணலாம். மருதநில ஒழுக்கத்தைப்பற்றிக் கூறுவது மருதக்கலி. கணவன் மனைவியின் காதல் வாழ்வு; அவர்கள் புதல்வரைப் பெற்று இன்புறுதல்; கணவனுடைய கூடா ஒழுக்கம் காரணமாக மனைவிக்கு ஏற்படும் ஊடல்; மனைவியின் ஊடல் நீங்குதல்; காதலர் இருவர் கருத்தொருமித்து இல்லறம் நடத்துதல்; இவைபோன்ற செய்திகளை மருதக் கலியிலே காணலாம். முல்லையொழுக்கத்தைப் பற்றி மொழிவது முல்லைக் கலி முல்லைநில மக்களின் வாழ்க்கை; அவர்களுடைய தொழில்; விளையாட்டு; அந்நிலத்துப் பெண்களின் சிறந்த மனப்பான்மை; உயர்ந்த குணம்; இவைகளையெல்லாம் முல்லைக்கலியிலே காணலாம். நெய்தல் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது நெய்தற்கலி. கணவனைப் பிரிந்திருக்கும் மனைவியின் நிலைமை; கணவன் பிரிவு காரணமாக அவள் உள்ளத்திலே தோன்றும் எண்ணங்கள்; அவள் தன் துன்பத்தைப் பற்றியும், கணவன் பிரிவைப் பற்றியும் வாய்விட்டுக் கூறுதல்; இவை போன்ற செய்திகளை நெய்தற் கலியிலே காணலாம். |