பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்111

இவ்வாறு காதல்வாழ்வு சம்பந்தமான ஐந்திணை ஒழுக்கங்களைப் பற்றியும் கூறுவதே கலித்தொகை. இவைகளுடன் கைக்கிளையைப் பற்றிய பாடல்கள் சிலவும், பெருந்திணையைப் பற்றிய பாடல்கள் சிலவும் காணப்படுகின்றன.

ஒருமனப்பட்டு மணம்புரிந்து கொண்ட காதல்களின் வாழ்க்கையைப்பற்றியவை ஐந்திணை ஒழுக்கங்கள். காதல் இன்னதென்று கண்டறிய முடியாத இளம் பெண்மேல் ஒருவன் கொள்ளும் காமம் கைக்கிளையாகும். பொருத்தமற்ற ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காமம் பெருந்திணையாகும்; தன்னை விரும்பாத ஒருத்தி மீது ஒருவன் கொள்ளும் காமமும் பெருந்திணை; தன்னை விரும்பாத ஒருவன் மீது ஒருத்தி கொள்ளும் காமமும் பெருந்திணையாகும்.

கலித்தொகையிலேயுள்ள பெரும்பாலான பாடல்கள் ஐந்திணை யொழுக்கத்தைப் பற்றியவை; சில பாடல்களே கைக்கிளை-பெருந்திணை பற்றியவை.

ஆசிரியர்கள்

பாலைக்கலி. இதுவே கலித்தொகையின் முதற் பகுதி. இதில் முப்பத்தைந்து பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் பெருங்கடுங்கோ. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பது இவருடைய முழுப்பெயர்.

இவர் வரலாறு முழுவதும் தெரியவில்லை. இவர் சேரர் பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்கலாம். இவர் ஒரு இளவரசர். இவர் பெயரைக் கொண்டு இவ்வாறு எண்ண இடந்தருகின்றது.

இவருடைய சிறந்த புலமையை இவருடைய பாலைக் கலிப்பாடல்களே எடுத்துக் காட்டும். அகநானூற்றிலே பன்னிரண்டு பாடல்கள்; குறுந்தொகையிலே பத்துப் பாடல்கள்;