குறிஞ்சிப் பாட்டும் இவருடையதே. பதிற்றுப் பத்திலே ஏழாம் பத்தும், புறநானூற்றிலே இருபத்தெட்டுப் பாடல்களும் இவரால் பாடப்பட்டவை. இவருடைய அகப்பொருட் பாடல்களிலே பெரும் பாலானவை குறிஞ்சித்திணை பற்றியவை. இதனால் இவர் குறிஞ்சித்திணையைப் பற்றிப் பாடுவதிலே தலைசிறந்த புலவர் என்பதைக் காணலாம். இவருடைய பாடல்களிலே இந்தக் குறிஞ்சிக்கலியே சிறந்த சொற்பொருட்கோவை. மருதக்கலி; இது கலித்தொகையின் மூன்றாவது பகுதி. இதில் முப்பத்தைந்து பாடல்கள் உண்டு. இதைப்பாடியவர் இளநாகனார் என்னும் புலவர். மதுரை மருதன் இளநாகனார் என்பது இவருடைய முழுப்பெயர். இவருடைய ஊர் மதுரை; தந்தை பெயர் மருதன்; ஆதலால் மதுரை, மருதன் என்ற சொற்களையும் இளநாகனார் என்ற பெயருடன் சேர்த்து வழங்கினர். இவர் காலத்திலே நாகனார் என்ற பெயருடைய புலவர்கள் வேறு சிலரும் இருந்தனர்; ஆதலால் இவரை இளநாகனார் என்று அழைத்தனர். சங்க நூல்கள் பலவற்றிலும் இவருடைய பாடல்கள் காணப்படுகின்றன. அகநானூற்றிலே இருபத்து மூன்று பாடல்கள்; குறுந்தொகையிலே நான்கு பாடல்கள்; நற்றிணையிலே பன்னிரண்டு பாடல்கள். புறநானூற்றிலே ஐந்து பாடல்கள் இவர் பாடியவை. இறையனார் அகப்பொருளுக்கு உரை கண்டவர்களிலே இவரும் ஒருவர் என்று சொல்லப்படுகின்றார். எல்லாத்திணைகளைப் பற்றியும் இவர் பாடியிருக்கின்றார். மருதக்கலிப் பாடல்கள் இவருடைய அறிவாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். |