பக்கம் எண் :

114எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

முல்லைக்கலி; இது கலித்தொகையின் நான்காவது பகுதி. இதில் பதினேழு பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் பெயர் உருத்திரன். இவருடைய முழுப்பெயர் சோழன் நல்உருத்திரன் என்பது. இவர் பெயரைக்கொண்டு இவரைச் சோழர் குடியிலே பிறந்தவர் என்று எண்ணலாம்.

இப்புலவர் பாண்டிய நாட்டிலே வாழ்ந்தவர் என்று தெரிகின்றது. இவர் பாண்டிய மன்னன் ஆதரவுபெற்று வாழ்ந்த ஒரு அருந்தமிழ்ப் புலவர். இவருடைய பாடல்களிலே பாண்டியநாட்டின் பெருமைதான் காணப்படுகின்றது.

இவர் பாடியவை இந்த முல்லைக்கலிப் பாடல்கள் மட்டுந்தான். சங்க நூல்களிலே இவர் பெயரால் வேறு பாடல்கள் ஒன்றுமே காணப்படவில்லை.

அகப்பொருள் பற்றிய பாடல்களிலே இந்த முல்லைக்கலியின் போக்கே ஒரு தனிப் போக்காகும். முல்லைத் திணையைப் பற்றிப் பாடியுள்ள வேறு எப்புலவரும் இந்த முறையைப் பின்பற்றவில்லை. முல்லை நில மக்களின் ஒழுக்கத்தைப் புதிய முறையிலே அழகாக அமைத்துப் பாடியிருக்கின்றார் இப்புலவர்.

ஏறுதழுவுதல், அல்லது கொல்லேறு தழுவுதல் என்னும் துறையையே விரிவாகக் கூறுகிறது முல்லைக் கலி. இப்பொழுதும் தமிழ் நாட்டிலே-தென் பகுதிகளிலே மஞ்சுவிரட்டு என்று சொல்லப்படும் மாடு பிடிக்கும் விழாக்கள் நடைபெறுகின்றன. அவ்விழாக்களைப் பார்த்தவர்கள் இந்த முல்லைத்திணைப் பாடல்களைப் படிப்பார்களானால் அவற்றை அப்படியே மனக்கண்ணால் காண்பார்கள்.

உருத்திரனாரின் புலமைத் திறத்திற்கு இந்த முல்லைக் கலியொன்றே போதுமானதாகும். தமிழ் உள்ள வரையிலும் இவருடைய புகழும் குன்றாது.