நெய்தற்கலி; இது கலித்தொகையின் ஐந்தாவது பகுதி. இதில் முப்பத்து மூன்று பாடல்கள் உண்டு. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் அந்துவனார் என்பது. இவருடைய முழுப்பெயர் மதுரை ஆசிரியர் நல்லந்துவனார். இவர் மதுரையிலே வாழ்ந்தவர். பலராலும் சிறந்த ஆசிரியராக மதிக்கப்பட்டவர். ஆதலால், மதுரை, ஆசிரியர் என்ற அடைமொழிகள் இவர் பெயருடன் இணைந்திருக்கின்றன. நல் என்னும் சிறப்புச் சொல் இவருடைய பெயருடன் சேர்ந்து நின்று இவருடைய பெருமையை விளக்குகின்றது. அகநானூற்றிலே ஒரு பாட்டு, நற்றிணையிலே ஒரு பாட்டு, பரிபாடலிலே நான்கு பாடல்கள், இவர் பாடியவை. இக் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலும் இவரால் பாடப்பட்டதே. கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரேதான். ஒரு அகநானூற்றுப் பாடல் இவரைப் பாராட்டிக் கூறியிருக்கின்றது. இதனை அகநானூற்று ஆராய்ச்சிலே காணலாம். நல்லந்துவனாரின் சிறந்த புலமையை இந்த நெய்தற் கலிப் பாடல்களிலே காணலாம். நூலின் சிறப்பு கலித்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு சிறு கதையைப் போல அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு படம் அமைத்து அப்பாடல் கருத்தை விளக்கலாம். காதலனுக்கும் காதலிக்கும் நடைபெறும் உரையாடல், தலைமகளுக்கும் தோழிக்கும் நடைபெறும் உரையாடல், தோழிக்கும் நற்றாய்க்கும் நடைபெறும் உரையாடல், தலைவன் தன் தோழனிடம் பேசுவது, தோழி |