பாராட்டுதல் மிகையானதன்று; உண்மையும் தகுதியும் பொருந்திய பாராட்டுரை. கலித்தொகைப் பாடல்கள் யார் மீதும் பாடப்படவில்லை. கலித்தொகை ஆசிரியர்கள் தாங்களே மனங்கனிந்து பாடியவை. அவர்கள் உள்ளத்திலே ஊக்கந் தோன்றிய போது ஊறி வடிந்த கவிப்பெருக்கு. அவர்களாகவே அகமகிழந்து கோத்த நவமணிக் கோவைகள். இவையே அவைகள் கற்றிந்தார் நெஞ்சைக் கவரும் பாடல்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணமாகும். சுவையுடன் சொல்லுதல் படிப்பவர் உள்ளத்திலே பதியும்படி சொல்லுவதிலே கலித்தொகை ஆசிரியர்கள் மிகச் சிறந்த கவிஞர்கள். இவ்வுண்மையைச் சில உதாரணங்களால் காணலாம். ஒரு தலைவி, தான் காதலிக்கும் தலைவன் யார், என்பதைத் தன் தோழியிடம் சொல்லுகின்றாள். கலித்தொகையின் 51-வது பாட்டு இது. குறிஞ்சிக் கலியில் உள்ளது. ‘‘ஒளியுள்ள வளையலை அணிந்திருக்கும் தோழியே! நான் விரும்பும் காதலன் யார் தெரியுமா? முன்பு, நாம், தெருவிலே சிறிய மணல் வீடு கட்டி விளையாடும்போது அந்த மணல் வீட்டைத் தன் காலால் கலைப்பான்; பின்புறமாக வந்து நம் தலையில் தரித்திருக்கும் மாலையை அறுப்பான்; நாம் விளையாடும் பந்தையும் தூக்கிக்கொண்டு ஓடிவிடுவான்; இப்படியெல்லாம் நாம் வருந்தும்படி குறும்புத்தனம் செய்யும் அந்தச் சிறிய பட்டிப் பையனைத்தான் உனக்குத் தெரியுமே. முன்னொரு நாள் அவன் செய்த குறும்புத்தனத்தைக் கேள்! |