அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே, உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு; அன்னை அடர்பொன் சிரகத்தால் வாக்கி, சுடர் இழாய்! உண்ணுநீர் ஊட்டிவா என்றாள்; என, யானும் தன்னை யறியாது சென்றேன், மற்றுஎன்னை வளைமுன் கைபற்றி நலியத், தெருமந்திட்டு, அன்னாய்! இவன் ஒருவன் செய்ததுகாண்! என்றேனா; அன்னை அலறிப் படர்தரத், தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா; அன்னையும் தன்னைப் புறம்புஅழித்து நீவ, மற்றுஎன்னைக் கடைக்கணால்கொல்வான்போல் நோக்கி, நாகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன். (பா. 51) இப் பாடலில் குறிக்கப்பட்டிருக்கும் காதலன் காதலிகள் இருவரும் விளையாட்டுப் பருவமுதல் ஒன்றாகப் பழகியவர்கள். இவர்கள் பருவமடைந்தபின் பிரியாத் துணைவர்களாயினர். மற்றொரு பாடல். அதில் சொல்லப்படும் செய்தி மிகவும் வேடிக்கையானது; நகைச்சுவை பொருந்தியது. இது, கலித்தொகையின் 65-வது பாடல்; குறிஞ்சிக் கலி. தலைவனும், தலைவியும் களவு மணத்திலே காலங்கடத்தி வருகின்றனர். ஒருநாள் இரவு; தலைவன் குறித்த இடத்திலே தலைவி போய் நிற்கின்றாள். அச்சமயம் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நேர்ந்தது. அந்த வேடிக்கையைப்பற்றித் தலைவி தன் தோழியிடம் கூறுகின்றாள். இந்த முறையில் அமைந்தது அந்தப் பாடல். ‘‘தோழியே! ‘‘நமது சேரியிலே, கருங்குட்டத்தான்; கால் கை குறைந்தவன்; ஒருபார்ப்பான் மறைந்து திரிகின்றான்; அவனிடம் அகப்படாமல் பாதுகாத்துக்கொள்’’ என்று நீ கூறியிருக்கிறாய் |