பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்121

இப் பாடலால் ஒரு பெண் தனது மவுனத்தால் எதிரியை நடுங்கச் செய்து தப்பித்துக்கொண்ட செய்தியைக் காணலாம். இவை போன்ற பாடல்கள் இன்னும் பல உண்டு.

உவமைகள்

கலித்தொகையிலே கூறப்படும் உவமைகள் மிகவும் தெளிவாக இருக்கும். கேட்போர் நெஞ்சத்தில் குடிகொள்ளுவதாக இருக்கும. உவமானங்களை எப்படித் தேர்ந்தெடுத்துத் தெரிவிக்கவேண்டும் என்பதற்கு அவைகள் வழிகாட்டுவன.

களவு மணத்திலே ஈடுபட்டு வாழ்ந்தாள் ஒருத்தி, அவள் தன் காதலனுடன் சேர்ந்து, தன் பெற்றோர்க்குச் சொல்லாமல் அவனூர்க்குப் போய்விட்டாள். அவளைக் காணாமல் வருந்திய செவிலித்தாய் அவளைத் தேடிக்கொண்டு புறப்பட்டாள். அவள் போகும் வழியிலே சில முனிவர்கள் எதிர்ப்பட்டனர். ‘‘என் மகளும், மற்றொருத்தியின் மகனும் இவ்வழியே போனதைப் பார்த்தீர்களா? என்று அவர்களிடம் கேட்டாள். ‘‘நாங்கள் அவர்களைப் பார்த்தோம்’’ என்று அவர்கள் கூறினர். அவளுக்கு ஆறுதல் மொழிகளும் புகன்றனர்.

‘‘பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்;
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

கலவைச் சந்தனம், அதைப் பூசிக்கொள்ளுவோர்க்குத்தான் நறுமணம் நல்கும். அது மலையிலே பிறந்தாலும் மலைக்கு அதனால் என்ன பயன்? நினைத்துப் பார்த்தால் உன் மகளும் உனக்கு அப்படித்தான்’’.