122 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும் தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. சிறந்த வெண்மையான முத்துக்கள், அணிபவர்களுக்குத்தான் அழகைத் தரும். அவை தண்ணீரிலே பிறந்தாலும், அவைகளால் தண்ணீருக்கு என்ன பயன்? ஆராய்ந்து பார்த்தால் உமது மகளும் உமக்கு அப்படித்தான்’’. ‘‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. ஏழு நரம்புகளையுடைய இனிய இசைக் கருவி (யாழ்) அதை வாசிப்பவர்க்குத்தான் இன்பந்தரும். யாழிலே இசை பிறந்தாலும் அந்த இசையால் யாழுக்கு என்ன பயன்? எண்ணிப் பார்த்தால் உமது மகளும் உமக்கு அப்படித்தான்’’. இவை அந்த முனிவர், மகளைப் பிரிந்து வருந்திய செவிலித் தாய்க்குக் கூறிய ஆறுதல் மொழிகள். இது கலித்தொகையின் 9-வது பாடல். பாலைக்கலி. பகற் காலத்திற்கும், மாலைக் காலத்திற்கும் கலித்தொகையிலே காட்டப்பட்டிருக்கும் உவமைகள் உள்ளத்தைக் கவர்வன. இவைகளை நெய்தற் கலிப்பாடல்களிலே காணலாம். இங்கே ஒரு உதாரணம் போதும்: ‘‘உறவும், உண்மையும், நல்ல நடுநிலைமையும் இவனிடத்திலே பிறந்து வளர்ந்தன; இப்பொழுது இவைகள் மறைந்தன; இவ்வாறு உலகத்தால் துக்கப்படும்படி மன்னன் மறைந்தான்; உயர்ந்த செயல்களையே மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து, குற்றங்களைக் களைந்து நன்றாக அரசாண்ட மன்னன் மறைந்தான்; அவன் நல்ல செங்கோலரசும் மாண்டது; இதைப்போல நிறைந்த கதிர்களையுடைய சூரியன் மறைந்தான்; |