பகற்பொழுதும் கழிந்தது. படிக்காமல் வயது முதிர்ந்தவன்; இரக்கமற்ற நெஞ்சமுடையவன்; அவன் உள்ளத்தைப் போல அடர்ந்த இருள் பரவுதற்குக் காரணமான மாலைக்காலம் வந்தது; தனித்திருப்போர்க்குத் துன்பத்தையும் மயக்கத்தையும் தரும் மாலைக்காலம் அது. நயனும், வாய்மையும்; நன்னர் நடுவும் இவனில் தோன்றிய; இவையென இரங்கப் புரைதவ நாடிப், பொய் தபுத்து இனிதாண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல் நிரைகதிர்க் கனலி பாடொடு பகல் செலக்; கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் புல்இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள்மாலை. பகற் பொழுதைச் சிறந்த அரசுக்கும், மாலைப் பொழுதை இரக்கமற்றவன் நெஞ்சத்திற்கும் ஒப்பாக்கியிருப்பதை இப்பாடலிலே காணலாம். இது கலித்தொகையின் 130-வது பாட்டு. நெய்தற்கலி. அரசியல் குடிமக்களுக்குக் குறையுண்டாகாமல் பாதுகாக்க வேண்டும். இத்தகைய ஆட்சியே சிறந்த அரசாட்சி. இந்த நல்லாட்சியை எவரும் அசைத்து அழித்துவிட முடியாது. இத்தகைய நல்லாட்சி நடைபெறும் நாட்டில்தான் அமைதியும் இன்பமும் குடிகொண்டிருக்கும்; செல்வம் கொழித்திருக்கும். எல்லா மக்களும் வறுமையின்றி வாழ்க்கை நடத்துவர். பண்டைத் தமிழர்கள் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். ஆதலால் அவர்கள் அரசியலிலே கண்ணும் கருத்துமாக இருந்தனர். சங்க இலக்கியப் பாடல்கள் எல்லாவற்றிலும் இக்கருத்தைக் காணலாம். |