தன்னுயிரைப் போலவே எண்ணிப் பாதுகாப்பவனே மக்களால் மதிக்கப்படும் மன்னவன்; அரசியல் தலைவன்; என்ற உண்மை விளக்கப்பட்டது. செல்வத்தின் சிறப்பு இம்மையிலே இன்பமடையச் செல்வமே ஏற்றகருவி. மறுமைக்கான நல்லறங்களைச் செய்வதற்கும் செல்வமே சிறந்த துணை. ஆதலால் பொருளீட்டும் முயற்சியிலே ஒவ்வொரு ஆடவனும் ஈடுபடவேண்டும். இது பழந்தமிழர் கொள்கை. தேட்டம் என்பது செல்வத்திற்கு ஒரு பெயர்; ஈட்டம் என்பதும் அதன் பெயர். தேடப்படுவது தேட்டம்; ஈட்டப்படுவது ஈட்டம். ‘‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க் களித்தலும் பெரியதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும். (பா. 11) பொருளே சிறந்த அறத்தை அடையச் செய்யும்; அருளுடையோர்க்கு அளிக்கும்படி செய்யும்; தனது பெரிய பகைவர்களை வென்று முறியடிக்கச் செய்யும்; தனது எதிரிகளை அழிக்கச் செய்யும்; அன்புநிறைந்த காதலுடன் இல்லற வாழ்க்கையிலே இன்புற்று வாழவும் செய்யும். ’’ செல்வமுடையவரே இவ்வுலகிலே சிறந்து வாழ்வர். செல்வமற்றவர்களின் வாழ்விலே இன்பமில்லை; அவர்களால் நல்லறங்களை நடத்த முடியாது; என்பதை இதனால் காணலாம். பொருளாதார உயர்வு தாழ்வுள்ள சமுதாயத்தில் இத்தகைய உணர்ச்சி மக்கள் மனத்திலே படிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் முன்னேற முடியும். ‘‘மடியிலான் செல்வம் போல் மரம்நந்த (பா. 35) சோம்பல் இல்லாதவனிடம் செல்வம் பெருகியிருப்பதைப் போல் மரங்களிலே மலர்கள் பூத்திருந்தன’’ |