பக்கம் எண் :

126எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

இது முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தைக் காட்டுகின்றது.

செல்வ நிலையாமை

செல்வத்திற்குக் காரணம் முயற்சி மட்டும் அன்று. பழவினையும் செல்வம் சேருவதற்குக் காரணமாகும். இக்கருத்தும் பழந்தமிழர்களிடம் குடிகொண்டிருந்தது.

செல்வம் நிலையுள்ளது; அழியாதது; என்று நம்பி அதைச் சேர்ப்பதிலே காலங்கடத்துவது அறியாமை. செல்வம் நிலையற்றது; வரும்; போகும்; ஆதலால் செல்வமுள்ளபோதே நல்ல செயல்களைச் செய்யவேண்டும். இதுவும் பழந்தமிழர் கொள்கை. இதை வலியுறுத்தவே செல்வம் நிலையற்றது என்பதைப் பற்றிப் பல நூல்களிலும் பாடியிருக்கின்றனர்.

‘‘மரீஇத் தாம்கொண்டாரைக் கொண்டக்காற்போலாது
பிரியும்கால் பிறர் எள்ளப் பீடின்றிப் புறமாறும், திரு.

செல்வமானது தான் சேர்ந்தவரைப் பெருமைக்கு ஆளாக்கும். அவரை விட்டுப்பிரியும்போது, சேர்ந்த காலத்தைப் போல் இல்லாமல், அவரை மற்றவர்கள் பார்த்து ‘‘ஏழை, வறியவர்’’ என்று பரிகசிக்கும்படி பெருமையின்றி வேறிடத்துக்குப் போய்விடும்’’ (பா. 8)

‘‘கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கில் பெயர்பு பெயர்பு உறையும்.

பொருள், தனக்கு உரியவர் இன்னார்தான் என்று கருதி ஒருவரிடத்திலே நிலைத்திராது. நல்வினையுடையவர்களிடமெல்லாம் மாறிமாறிச் சென்று தங்கும். ’’ (பா. 21)

இவைகள் செல்வம் நிலையற்றது என்பதைக் காட்டுவன. முயற்சி மட்டும் செல்வத்திற்குக் காரணம் அன்று; பழவினையும் செல்வத்திற்குக் காரணம்; என்ற கருத்தையும் இவைகள் காட்டும்.