நீதிமொழிகள் மக்களுக்கு அறிவு புகட்டும் நீதிமொழிகள் பலவற்றைக் கலித்தொகையிலே காணலாம். அவைகள் சிறந்த அறிவுரைகள்; உணர்வோர் உள்ளத்தில் ஓடாமல் ஊன்றி நிற்கக் கூடியவைகள். ‘‘செம்மையின் இகந்துஒரீஇப்பொருள் செய்வார்க்கு அப்பொருள், இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ! (பா. 14) ஒழுங்கு தவறிய நெறியிலே பொருள் சேர்ப்பவரிடம் அப்பொருள் நிலைத்திராது; இம்மையிலும் பகையாகி நின்று துன்பந்தரும்; மறுமையிலும் பகையாகி நின்று துயர் விளைக்கும்’’. நேர்மையான வழியிலே பொருள் சேர்க்கவேண்டும்; பொருளாசை கொண்டு அறமற்ற முறையிலே செல்வம் சேர்ப்பது தவறு; என்று கூறுகிறது இது. ‘‘கிளைஅழிய வாழ்பவன் ஆக்கம்போல், புல்லென்று வளையானா நெகிழ்பு ஓடும்தோள். (பா. 34) சுற்றத்தார் துன்புறும்படி தான் மட்டும் இன்புற்று வாழ்கின்றவனுடைய செல்வம்போல் என் தோள் இளைத்து அதில் உள்ள வளை கழன்று ஓடிவிடுகின்றது’’. சுற்றத்தாரைப் பேணாதான் செல்வம் நிலைக்காது; திடீரென்று மறைந்துவிடும். இதுவே இவ்வடிகளின் கருத்து. ‘‘அஞ்சுவது அஞ்சா அறனிலி யல்லன், என் நெஞ்சம் பிணிக்கொண்டவன். (பா. 42) என் நெஞ்சத்திலே குடிகொண்டிருப்பவன் அஞ்சத் தகுந்த அக்கிரமங்களை அஞ்சாமல் செய்யத் துணியும் அறமற்றவன் அல்லன்’’: |