128 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
நீதியும் நேர்மையுமற்ற செயல்கள் அஞ்சத்தக்கவை; அவைகளைச் செய்யாமலிருப்பதே அறமாகும்; இக் கருத்தை வலியுறுத்துகின்றது இப்பகுதி. ‘‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’’ என்ற திருக்குறளை இக்கலித்தொகை நினைவுக்குக் கொண்டு வருவதைக் காணலாம். ‘‘ஈதல் இரந்தார்க்கு ஒன்றுஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று. (பா. 61) ஈகையை விரும்பி வந்து, தம்மிடம் இரப்பவர்க்கு ஒன்றும் உதவாமல் உயிர் வாழ்வதைவிடச் சாவதே நலம்’’. வறுமையால் வாட்டமுற்று வந்து இரப்போர்க்கு உதவி செய்யவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது இது. ‘‘சாதலின் இன்னாததுஇல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை’’ என்ற திருக்குறளின் கருத்தும் இக் கலித்தொகையும் ஒத்திருப்பதைக் காணலாம். ‘‘தமக்கினி தென்று வலிதில் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று. (பா. 62) தமக்கு நன்மையுண்டு என்பதற்காகப் பிறர்க்கு வலிந்து துன்பஞ்செய்தல் நன்றன்று. ’’ தன் நன்மைக்காக-இன்பத்துக்காக-பிறர்க்குத் தீங்கிழைத்தல் தவறு. இதுவே இதன் கருத்து. ‘‘ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்; அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை; அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; |