அவன் பெற்ற மக்களிலே மூத்தவன்; துரியோதனன்; அவனுடைய சூழ்ச்சியினால், உலகம் புகழும் பாண்டவர்கள் உள்ளே இருக்கும்போதே அழகாகச் செய்யப்பட்ட அரக்கு மாளிகையைத் தீப்பற்றிச் சூழ்ந்துகொண்டது; அதுபோல’’ விளக்கமுற்ற நாடு-திருதராஷ்டிரம், இது பாண்டவர்களை அரக்கு மாளிகையிலே வைத்துத் தீயிட்ட பாரத வரலாற்றைக் குறிக்கின்றது. ‘‘நூற்றுவர்தலைவனைக் குறங்கு அறுத்திடுவான்போல். (பா. 52) நூற்றுவர் தலைவனாகிய துரியோதனனுடைய துடையை அறுக்கின்ற பீமனைப்போல’’. ‘‘துரியோதனனுடைய துடையைஅறுத்து, அந்த இரத்தத்தினால் பாஞ்சாலியின் கூந்தலை முடிக்கச் செய்வேன்’’ என்று கூறிய பீமனுடைய சபதத்தையும், பாரதப் போரிலே அவன் அவ்வாறு செய்ததையும் குறிப்பிடுகின்றது இப்பாடற்பகுதி. ‘‘நூற்றுவர் மடங்க வரிபுனை வல்வில் ஐவர் அட்ட பொருகளம் போலும் தொழூஉ. (பா. 104) துரியோதனாதியராகிய நூற்றுவரும் அழியும்படி வரிந்து கட்டப்பட்ட வலிமையான வில்லையுடைய பாண்டவர்கள் போர் செய்து முடித்த போர்க்களத்தைப்போலக் காணப்பட்டது. போர்க் காளைகள் நிறைந்த தொழுவம்’’. இது பாரதப்போர் நடைபெற்ற யுத்தகளத்தைக் குறித்தது. இவ்வாறு இராமாயண பாரத வரலாறுகள் உவமைகளாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. |