பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்139

மாலையணிந்தவர்; உடையாகப் புலித்தோலைப் புனைந்தவர்; கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் கூத்துக்களை ஆடியவர்.

திருமால் சக்கரப்படையை உடையவர்; மார்பிலே இலக்குமியை ஏற்ற்ிருப்பவர். வலம்புரிச் சங்கத்தை ஏந்தியிருப்பவர்.

பிரமதேவன்; அவனுடைய தொழில் படைப்புத் தொழில்.

பலராமன்; அவனுடைய படை கலப்பை. இன்னும் கண்ணன், கூற்றுவன், காளி, முருகன், இந்திரன் முதலிய தெய்வங்களும் காணப்படுகின்றன.

மாடு பிடித்தல்

முல்லை நிலத்துமக்கள் சிறந்த வீரர்களா யிருந்தனர். அந்நிலத்துப் பெண்கள் வீரர்களைத்தான் மணம்புரிந்து கொள்ளுவார்கள். ‘‘கொல்லேறு தழுவுதல்’’ என்பது ஒரு விளையாட்டு. பந்தயத்திற்கென்று வளர்க்கப்பட்ட காளைகளை அவிழ்த்து விரட்டுவார்கள். அக்காளைகளை அடக்கிப் பிடிக்கின்றவர்களே பெண்களால் பாராட்டப்படுவார்கள். அவ்வீரர்களையே அந்நிலத்து மாதர்கள் மணந்து கொள்ளுவார்கள். இது பழந்தமிழ் நாட்டு வழக்கம். இதனை முல்லைக் கலியிலே காணலாம்.

கொல்லேறு தழுவுதல் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான செயல். ஆயினும் அச்செய்கையில் வெற்றி பெறுகின்றவனையே ஆயர்குலப் பெண்கள் ஆண் மகனாக மதிப்பர். இல்லறத்தை இனிது நடத்துவதற்கு ஏற்றவனாக எண்ணுவர்.