இத்திறமை அவர்களுக்கு உண்டு என்பதை மெய்ப்பிப்பதற்காகவே இவ்வழக்கம் அவர்களிடம் ஏற்பட்டது என்று எண்ணலாம். காளைகள் காளைகளின் இலக்கணத்தைக் கலித்தொகையிலே காணலாம். காளைகளிலே ஐந்துவகையுண்டு; அவை, காரி, வெள்ளை, குரால், புகர், சேய் என்பன. காரி-கறுப்புக்காளை. வெள்ளை-வெள்ளைக் காளை. குரால்-மயிலைக்காளை. புகர்-புள்ளிக்காளை. சேய்-சிவப்புக் காளை. அவைகளின் தோற்றங்கருதி இவ்வாறு ஐவகையாகப் பிரித்தனர். ‘‘வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத் தெள்ளிதின் விளங்கும், சுரிநெற்றிக் காரியும் திருமால் தன் வாயில் வைத்து ஊதுகின்ற வலம்புரிச் சங்கினைப்போல், தெளிவாக விளங்கும் வெண்மையான நெற்றியையுடைய கறுப்புக் காளையும்’’. ‘‘ஒரு குழையவன் மார்பில் ஒண்தார்போல், ஒளிமிகப் பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும் பலராமனுடைய மார்பிலே நீண்டு தொங்குகின்ற சிவந்த மலர் மாலையைப் போல, ஒளியுடன் அழகாக அமைந்திருக்கின்ற, சிவந்த கோட்டையுடைய வெள்ளைக்காளையும்’’. ‘‘பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற்றணி போல, இரும்பிணர் எருத்தின் ஏந்திமில்குராலும். சிவபெருமானுடைய அழகிய கழுத்திலே காணப்படும் கருமையணியைப்போல, கழுத்திலே கருமையும் உயர்ந்த திமிலையும் உடைய மயிலைக் காளையும்’’. |