பரங்குன்றம் இமயத்தைப் போன்றது; அங்குள்ள சுனை இமயத்தில் உள்ள சரவணப் பொய்கையைப் போன்றது; என்று பரிபாடலில் காணப்படுகின்றது. இவ்வாறு திருப்பரங்குன்றம் பல பாடல்களிலே பாராட்டப்பட்டிருகின்றது. பரிபாடற் பாட்டிலே காணப்படும் திருப்பரங்குன்றின் இயற்கை வளத்தை இன்று காணமுடியவில்லை. வையையாறு ஒன்பது பாடல்கள் வையையாற்றின் பெருமையைப் பாடுகின்றன. அவை 6. 7. 10. 11. 12. 16. 20. (24) ஆகிய எண்ணுள்ள பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ‘‘மலையிலே பிறந்து வரும் வையை’’ என்று தொடங்குவது குறிப்பிடத் தகுந்தது. வையை வெள்ளத்திலே பல மலர்கள் மிதந்து வருகின்றன; சந்தனம் முதலிய நறுமணப் பண்டங்களை அவ்வெள்ளம் அடித்துக்கொண்டு வருகின்றது; வையையிலே வெள்ளம் வந்துவிட்டது என்பதைக் கேட்டவுடன் மதுரை நகர மக்கள் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றனர்; ஆண்களும் பெண்களும் அகமகிழ்ச்சியுடன் ஆற்றிலே நீராடுகின்றனர்; இச்செய்திகளைப் பற்றித்தான் எல்லாப் பாடல்களும் இனிய நிகழ்ச்சிகள் பலவற்றுடன் இணைத்துக் கூறுகின்றன. வையை நதியிலே மக்கள் புகுந்து நீராடுந் துறையை திருமருத முன்துறை என்பர். திருமருத முன்துறை (பா 7. வரி 3’’) திருமருத நீர்ப்பூந்துறை (பா11. வரி. 30) என்று பரிபாடல்கள் கூறுகின்றன. இன்று வையை நதி கடலோடு கலக்கவில்லை. இடையிலே நின்றுவிடுகின்றது. பண்டைக் காலத்தில்-அதாவது கடைச்சங்க காலத்தில் வையை நதி மலையிலே பிறந்து கடலிலே வீழ்ந்தது. |