பக்கம் எண் :

156எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

‘‘வையைமடுத்தாற் கடலென (பா 20. வரி 42) வையை கடலிலே கலந்ததுபோல’’ என்று உவமையாகக் காட்டப்பட்டுள்ளது.

‘‘நுரையுடன் மதகுதொறு இழிதருபுனல்
கரைபுரளிய செலும், மறிகடல்
புகும் அளவு அளவு இயல் இசை,
சிறை தணிவின்று வெள்ளமிகை,                        (பரிபாடல் திரட்டு-2)

நுரையுடனே மதகுகள் வழியாக வருகின்ற வெள்ளம் கரைபுரண்டு போகின்றது. அலை வீசும் கடலிலே போய்ச்சேரும் அளவும், தாளம், பாட்டு, இசைகளைப் போன்ற ஓசைகளை எழுப்பிக்கொண்டு ஓடுகின்றது; அணைகளைக் கண்டு தணிந்து நிற்காமல் அவைகளை அடித்துக்கொண்டு ஓடுகின்றது; இத்தகைய மிகுந்த வெள்ளத்தை யுடையது வைகையாறு’’ இதனாலும் வையை கடலொடு கலந்ததைக் காணலாம்.

‘‘வைகையின் கரைகள் வளமுற்றிருந்தன. அவைகளைக் கண்டவர்கள், அவைகள் வள்ளல் தன்மையிலே சிறந்த பாண்டிய மன்னனுடைய கொடையைப் போல இருக்கின்றன என்பர். மேகங்கள் படிகின்ற மலையிலே தோன்றிய மிளகு, சந்தனம், வெண்ணெய்க்காகக் கடையும் தயிரைப் போன்ற நுரை, இன்னும் பல பண்டங்கள் ஆகியவைகளை வைகை வெள்ளம் தன் இருகரைகளிலும் குவித்துக்கொண்டே ஓடுகின்றது.

கரையே
கைவண் தோன்றல் ஈகைபோன்ம் என்;
மைபடு சிலம்பிற் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
எவ்வயினானும் மீதுமீது அழியும்’’                           (பா. 16 வரி 1-4)