இதனால் வைகை வெள்ளத்தின் சிறப்பைக் காணலாம். ‘‘அன்னப் பேடை போன்ற பெண்கள் மெதுவாகச் செல்லும் குதிரைகளின் மேல் ஏறி வந்தனர்; பெண்யானைகளின் மேலும் ஏறி வந்தனர். ஆண்கள் விரைந்து செல்லும் குதிரைகளின் மேல் ஏறிப் பாய்ந்து வந்தனர்; ஆண் யானைகளின் மேல் அமர்ந்து வந்தனர்; நல்ல ஓசை தரும் மணி புனைந்த பெரிய தேர்களின் மேல் ஏறியமர்ந்து, விரைந்து செல்லும்படி குதிரைகளைத் தார்க்குச்சியால் குத்தியோட்டினர். இவ்வாறு ஆண்களும் பெண்களும் வெள்ளத்தைக் காணும் வேட்கையுடன் விரைந்து வந்து கூடினர்; நீராடுவோர் கூட்டமும் ஒவ்வோரிடத்திலும் நிறைந்தது; வெள்ளத்தை வேடிக்கைப் பார்ப்போர் கூட்டமும் கரையிலே நிரம்பிற்று; வெள்ளமும் பெருகிக் கரை புரண்டு ஓடிற்று. மடமா மிசையோர் பிடிமேல் அன்னப் பெரும் பெடை அனையோர்; கடுமா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும், வடி மண நெடுந்தேர் மாமுள் பாய்க்குநரும், விரைபு விரைபு, மிகை மிகை யீண்டி ஆடல் தலைத் தலை சிறப்பக், கூடல் உரைதர வந்தன்று வையை நீர், வையைக் கரைதர வந்தன்று காண்பவர் ஈட்டம், நிவந்தது நீத்தம் கரைமேலா’’ (பா. 12. வரி 26-34) வையைப் பெருக்கைக் காண மதுரை மக்களுக்கிருந்த ஆர்வம்; அவர்கள் வையைக் கரையிலே வந்து கூடியது; வையை வெள்ளப்பெருக்கு; ஆகியவைகளை இதனாற் காணலாம். |