அந்த அன்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாமா?’’ என்று உரையாடினர். ஒருவன் தன் காதலி அணிந்திருக்கின்ற முத்து மாலையைப் பார்த்தான்; அவளுடைய நெருங்கிய மார்பையும் பார்த்தான். அவனைக் கண்டு அப்பெண் நாணமடையாமல் நின்றாள். இந் நிகழ்ச்சியைக் கண்டு பரிகசித்தனர் சில பெண்கள். ‘‘நாணாள்கொல் தோழி! நயனில் பரத்தையின் தோள்நலம் உண்டுதுறந்தான் என ஒருத்தி யாணர் மலிபுனல் நீத்தத்து இரும்பிடி சேணவெரிநின் சிறந்தானோடு ஏறினாள் நாணுக் குறைவிலள் நங்கை மற்று என்பரும்; கோட்டியுள் கொம்பர் குவிமுலைநோக்குவோன் ஒட்டைமனவன், உரமிலி, என்மரும்; சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள், நிறந்திரிந்தாள், நெஞ்சத்தை நீத்தாள் நெறிசெல்வான்பின், நிறை அஞ்சிக் கழியாமோ அன்புற்றால் என்மரும்; பூணாரம் நோக்கிப் புணர்முலை பார்த்தான் உவன், நாணாள் அவனை இந்நாரிகை என்மரும்’’ (பா. 12) வைகை வெள்ளத்தைக் காணுவதற்காகக் கூடிய பெண்கள் வம்புரைகள் பேசிக்கொண்டு நின்றதைக் குறித்தன இவ்வடிகள். பரமசிவன் பரமசிவனைப்பற்றிய தனிப்பாடல் பரிபாட்டில் இல்லை. ஆயினும் அவரைப்பற்றிய வரலாற்றைக் காணலாம். அவர் திரிபுரத்தை எரித்த வரலாறு சுட்டப்படுகின்றது. பரமசிவனைப் ‘‘பார்ப்பான்’’ என்றும், நான்முகனை ‘‘அந்தணன்’’ என்றும் பரிபாடல் கூறுகின்றது. |