| 160 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘நான்முகன் ஓட்டும் முறையறிந்து குதிரைகளை ஓட்ட - வேதங்களாகிய குதிரைகளைப் பூட்டிய - உலகமாகிய தேரிலே ஏறிச்சென்றான். வாசுகி யென்னும் நாகத்தை நாணாகவும் - மேருமலையை வில்லாகவும் கொண்டு சென்றான். மூன்றுவகையான பலமுள்ள மதில்களையுடைய திரிபுரத்தை, ஒப்பற்ற அக்கினியாகிய அம்பினால் சிதையும்படி அழித்தான்; இதனால் எண் திசைகளும் வெந்தன. இவ்வாறு செய்தவன் தேவர்கள் செய்த வேள்வியின் அவிர்ப் பாகத்தையுண்டவன்; பசிய கண்களையுடையவன்; பார்ப்பானாகிய பரமசிவன். ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ, வேதமாபூண், வையத்தேர் ஊர்ந்து, நாகம் நாணா, மலை வில்லாக மூவகை ஆர்எயில் ஓர் அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம்உண்ட பைம்கண்பார்ப்பான்’’ (பா. 5) இதனால் சிவபெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். கடவுள் வணக்கம் சங்க காலத்து மக்களிடம் கடவுள் நம்பிக்கை குடிகொண்டிருந்தது. அவர்கள் பலவகையான தெய்வங்களை வணங்கி வந்தனர். இவைகளைச் சங்க நூல்கள் எல்லாவற்றிலும் காணலாம். கடவுளை வணங்குவோரில் இருவகையினர் இருந்தனர். தாம் கருதிய காரியம் கைகூட வேண்டும் என்ற எண்ணத்துடன் வணங்குவோர் ஒருவகையினர்; எப்பயனும் கருதாமல், இறைவனை வணங்குவது கடமை என்ற கருத்துடன் வணங்குவோர் ஒருவகை. இவ்விரண்டு செய்திகளும் பரிபாடலிலே காணப்படுகின்றன. |