பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்161

‘‘என் வயிற்றிலே கர்ப்பந் தரிக்க வேண்டும் என்று சில பெண்கள் வேண்டிக்கொள்ளுகின்றனர்; எம் கணவருக்குச் சிறந்த செல்வங்கள் கிடைக்க வேண்டுமென்று சொல்லிச் சில பெண்கள் வணங்குகின்றனர்; வியக்கத்தக்க போரிலே எம் கணவருக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்று வழிபடுகின்றனர் சில பெண்கள்.

கருவயிறு உறுகெனக் கடம்படுவோரும்,
செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்துவோரும்,
ஐயமர் அடுகென அருச்சிப்போரும்’’                                (பா. 8)

பரங்குன்றத்திலே பெண்கள் இவ்வாறு முருகனிடம் வரங்கேட்டுப் பணிகின்றனர்; ஏதேனும் ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் பெரும்பாலும் பெண்கள் தெய்வ வழிபாடு செய்வார்கள்; அவர்களுடைய வேண்டுகோளும் விருப்பமும் அவர்களுடைய குடும்ப நலத்தைக் குறித்ததாகவேயிருக்கும். மேலே காட்டிய பரிபாடலால் இவ்வுண்மை விளங்குகின்றது.

‘‘கடம்பமலர் மாலையை அணிந்த முருகனே! யாம் உன்னிடம் இரந்து கேட்பவை பண்டங்களுமல்ல; பொன்னுமல்ல; இன்பமும் அல்ல. உன்னிடம் நாங்கள் வேண்டுகின்றவை உன்னுடைய அருள்; உன்னிடம் நாங்கள் செலுத்த வேண்டிய அன்பு; அறநெறியைப் பின்பற்றியொழுகும் சிந்தை; இவைகளேதாம்.

யாஅம் இரப்பவை
பொருளும், பொன்னும், போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்,
உருள் இணர்க்கடம்பின் ஒலிதாரோயே’’                             (பா. 5)

அன்பு செலுத்தி, நல்லொழுக்கத்திலே நின்று, நன்மை பெறும்படி அருள் செய்ய வேண்டும் என்று அறிஞர்கள் கடவுளை வேண்டுவார்கள். இதனை இவ்வரிகள் காட்டுகின்றன.