அழிதவப்படிவத்து அயரியோரும் மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார் நின்னிழல்’’ (பா. 5 வரி 73-77) இது செவ்வேளைப்பற்றிய பாட்டு. கடவுளை வணங்காதார் கருணையற்றோர்; ஒழுக்கமற்றோர்; அறிவற்றோர்; என்று கூறுகிறது இப்பாட்டு. ஆத்திக நாத்திக சண்டை சங்ககாலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து என்பதை இது விளக்கும். அந்தணர்கள் சங்ககாலத்திலே வடமொழி வேதங்கள் தமிழ் நாட்டிலே வழங்கி வந்தன. அவற்றைப் படித்த அந்தணர்கள் பலர் தமிழ் நாட்டிலே வாழ்ந்தனர். அவர்கள் அறிவாளிகளாகக் கருதப்பட்டனர். வேத வேள்விகளும் தமிழ்நாட்டிலே நடைபெற்றன. இவைகளைப் பல பாடல்களிலே காணலாம். ‘‘மதுரையிலே வாழும் மக்கள் விடியற்காலையிலே விழித்தெழுவார்கள். அவர்கள் அந்தணர்களின் வேத முழக்கத்தைக் கேட்டு விழித்தெழுவார்கள். சேரனுடைய வஞ்சிமா நகரத்தில் உள்ள மக்களும், சோழனுடைய உறையூரில் உள்ள மக்களும் கோழியின் கூவுதலைக் கேட்டுத்தான் விழித்தெழுவார்கள். ஆகையால் வேத வொலியையுடைய மதுரையே சிறந்த நகரம்’’. இது மதுரையைப் பற்றிய ஒரு பரிபாடற் பகுதியிற் காணப்படுவது. ‘‘நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியான் எழாது எம்பேரூர் துயிலே’’. |