பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்165

ஆசாரக் குறைவாக நினைப்பார்கள். இச்செய்தியைப் பரிபாடல் கூறுகின்றது.

ஆற்று வெள்ளத்திலே நுரை மிதந்து வருகின்றது; அந்நுரையின்மேல் ஈக்கள் மொய்க்கின்றன; நீராட வந்த அந்தணர்கள் அக்காட்சியைக் கண்டனர்.

‘‘ஈக்கள் மொய்க்கின்றன; காய்ச்சிய மதுவைச் சுமந்து கொண்டு வருகின்றது இந்த ஆறு; என்று நினைத்துப், பார்ப்பார்கள் அவ்வாற்றில் குளிக்கவில்லை.

ஈப்பாய் அடு நறாக்கொண்டது இவ்யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு’’

‘‘ஆண்கள் பெண்கள் பலர் இவ்வாற்றிலே நீராடுகின்றனர். அவர்கள் தம்மேல் பூசியிருக்கின்ற வாசனைப் பொருள்களைக் கழுவிவிட்டனர். அந்த வாசனையைத் தூவிக்கொண்டு வருகின்றது இந்தயாறு; என்று கருதி அந்தணர்கள் குளிக்கவில்லை.

‘‘மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு’’

‘‘வையை நீருடன் தேன் கலந்து வருகின்றது. இதனால் தண்ணீரில் தெளிவில்லை; கலங்கலும் வழு வழுப்பும் கலந்திருக்கின்றன; என்று ஐயர்கள் அந்த ஆற்றுநீரில் வாய்கொப்பளிக்க மாட்டார்கள்.

வையைதேம் மேவ வழு வழுப் புற்றென
ஐயர் வாய் பூசுறார் ஆறு

இச் செய்திகள் வையையைப்பற்றிப் பாடும் இருபத்து நான்காவது பாட்டிலே காணப்படுகின்றன. இப்பாடலும் டாக்டர். உ. வே. சா. பதிப்பில் பிற்சேர்க்கையில் உள்ளது.