168 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
நடனமாடுவோர், பாடல் இசைப்போர், சூதாடுவோர் போன்றவர்கள், தாங்களே சிறந்தவர்கள் என்ற புகழை நிலைநாட்ட மற்றவர்களுடன் போட்டியிடுவார்கள்; தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். இத்தகைய கலைப் போட்டிகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கக் கொடி கட்டியிருப்பர். ‘‘ஆடல் பயின்றாரை அவ்வாடல் பயின்றோர் போட்டியிட்டு வெல்லவும், பாடல் கற்றவர்களை அப்பாடல்களைப் பயின்ற பாணர்கள் வெல்லவும், சூதாட்டத்திலே வல்லவர்களை, அச் சூதாட்டத்திலே தேர்ந்தவர்கள் தங்கள் திறமையைக் காட்டி வெல்லவும், இவையல்லாத மற்றைய கல்விகளிலே வல்லவர்களை, அக்கல்விகளிலே சிறந்தவர்கள் வாதித்து வெல்லவும் கொடி கட்டப்பட்டிருந்தது. புகழுடைய நல்ல புது நீர் நிறைந்த தடாகம் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்திலே இந்தக் கொடி பறந்து கொண்டிருந்தது. ஆடல் நவின்றோர் அவர்போர் செறுப்பவும், பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும், வல்லாரை வல்லார் செறுப்பவும், அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனல் தடாகம் ஏற்ற தண்சுனைப் பாங்கர்ப் படாகை நன் றன்று’’ (பா. 9 வரி 72-78) திருப்பரங்குன்றத்திலே இவ்வாறு கலைப்போட்டிகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அக்காலத்திலே கலைஞர்களிடையிலே போட்டிகள் நடைபெற்றுக் கலைகள் வளர்ச்சி யடைந்ததைக் காணலாம். |